இரண்டு நாட்களுக்கு முன்பு,சொந்த/அலுவலக வேலையாக புதுவை மற்றும் விழுப்புரம் சென்றிருந்தேன். அங்கு நடந்த ஒரு சம்பவம்.
காலை எட்டரை மணிக்கு ராதாபுரம் என்னும் ஊரிலிருந்து புதுவைக்கு செல்ல பேருந்தில் ஏறினேன். அந்த ஊரில் இருந்து புதுவைக்கு அதிக பேருந்து வசதி இல்லை. 30 கி.மீ. தூரத்தில் உள்ள புதுவை தொழிற்பேட்டை வேலைக்கு செல்வதற்காக முண்டியடித்து ஏறினேன். என்னுடைய சுமாரான கணக்குப்படியே, பேருந்தினுள் குறைந்த பட்சம் தொண்ணூறு பேராவது இருப்பார்கள். இது இல்லாமல் பேருந்தின் மாடியிலும் ஆட்கள்.
பேருந்து புதுவையை நெருங்க நெருங்க, எனக்கு மூச்சு விடுதலே சிரமம் என்ற நிலையில் ஒரு நிகழ்ச்சி.
ஒரு நான்கு முனை சாலையில் ஒரு விபத்து. விபத்தை முன்னிட்டு அனைத்து புறங்களிலும் போக்குவரத்தை நிறுத்தினர் போக்குவரத்து போலீசார். நான் வந்த பேருந்தை நிறுத்த சொல்லி கை காட்ட, இந்த பேருந்து ஓட்டுனர் நிறுத்தாமல் செல்ல, இரண்டு கி .மீ துரத்தி வந்து மறித்து நிறுத்தினார் போலீஸ்காரர்.
பின் அவர்களுக்குள் பலத்த வாக்குவாதம். வாக்குவாதம் முற்றி ஓட்டுனரையும், நடத்துனரையும் காவல் நிலையம் அழைத்து செல்ல ஆயத்தமானபோது பேருந்தினுள் இருந்தவர்கள் ஒன்று கூடி காவல்துறையிடம், எங்களை இறக்கிவிட்டு விட்டு நீங்கள் அவர்களை அழைத்து செல்லுங்கள் என வேண்டுகோள் வைக்க, காவல்துறையினர் உதாசீனப் படுத்திவிட்டு அழைத்து சென்றனர்.
(அந்த பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிற்பேட்டை தினக் கூலியினர், அருகில் வேறு பேருந்து நிறுத்தமும் இல்லை,அங்கிருந்து புதுவைக்கு பத்து கி.மீ )
அதன் பின் நடந்தது,?
தினசரி அந்த பேருந்தில் வருபவர்கள் ஒன்று கூடி ஏதோ பேசினர்.
வேறு ஒருவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார். பேருந்தை சற்று நகர்த்தி சாலையின் குறுக்காக, வேறு வாகனம் எந்த பக்கமும் செல்ல முடியாதபடி நிறுத்தினார். அதற்கு பிறகு அவர்கள் செய்த காரியம், எனக்கு திகைப்பு, ஆச்சரியம், அதிர்ச்சி என்று சொல்ல முடியாத உணர்ச்சிகளை அளித்தது.
பேருந்தின் முன் சக்கரத்தை கழட்டி, அருகிலிருந்த புதரில் மறைத்து வைத்து விட்டனர். பத்து நிமிடத்தில் இரண்டு பக்கமும் வாகனங்கள் பெருகி ஒலிப்பான்கள் அலற ஆரம்பித்து விட்டன. மேலும் அது முதல்வர் வரும் வழியாம்.
காவல்துறையினர் வந்து பேருந்தை எடுக்க முற்பட்டபோது, சக்கரத்தை கேட்டால், பேருந்தில் இருந்த ஒரு நல்லவரும் வாயை திறக்கவில்லை.
பிறகென்ன பேச்சுவார்த்தைதான்.
பேச்சுவார்த்தையின் முடிவில், ஓட்டுனரையும் நடத்துனரையும் அழைத்துவந்த பிறகுதான் சக்கரத்தை எடுத்து கொடுத்தனர்.
இதில் யாரை சொல்லி நோவது?
குறிப்பு: பிறகு நான் விசாரித்து தெரிந்து கொண்டது. அந்த பகுதியில் பேருந்து வசதி மக்கள் தொகைக்கேற்ப இல்லை. கிட்ட தட்ட அனைத்துப் பேருந்துகளும் இது போன்ற நிலையில் தான் வரும்.
குறிப்பு 1: இதே போன்றதொரு நிகழ்வு சில நாட்களுக்கு முன்பு புதுவையின் வேறொரு பகுதியில் நடந்துள்ளது. அதை அடியொற்றித்தான் இந்த யோசனை, இந்த பேருந்தில் இருந்த மக்களுக்கும் வந்துள்ளது.
1 கருத்து:
நல்ல சம்பவம். நல்ல பதிவு.
கருத்துரையிடுக