ஊட்டி குருகுலம் பள்ளியில் தான் இது...
---------------------------------------------------------------
சட்டசபை, லோக்சபா தேர்தலைப் போல், ஊட்டி குருகுலம் பள்ளியில் மாணவர் பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது, வியப்பளித்தது.ஊட்டி தூனேரியில் உள்ள அகலார் குருகுலம் பள்ளியில், மாணவர் பேரவைத் தலைவர், துணை தலைவருக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு, இரு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
தலைவருக்கு, ஷாலினி தேவி, பிரீத்தி, வினோதினி, சிந்து, ஆஷா பிரியா, பேரவைத் துணை தலைவருக்கு அனுஷா, விக்னேஷ், நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தனர்; சிந்து வாபஸ் பெற்றதால், களத்தில் 6 பேர் போட்டியிட்டனர்.நேற்று முன்தினம் காலை நடத்தப்பட்ட கடவுள் வாழ்த்து நேரத்தில், போட்டியிடுபவர்கள், தங்களின் வாக்குறுதிகளை மாணவ, மாணவிகளிடம் தெரிவித்தனர்.
4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், வாக்களிக்க அனுமதிக்கப் பட்டனர். மதியம் 12.30 மணியளவில் ஓட்டுப்பதிவு துவங்கியது. சட்டசபை, லோக்சபா தேர்தல் விதிமுறைகள், இப்பள்ளியில் நடத்தப்பட்ட ஓட்டுப்பதிவிலும் கடைபிடிக்கப் பட்டது.மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று, தங்களின் பள்ளி அடையாள அட்டையை காண்பித்து, கையெழுத்திட்டு, கையில் "மை' வைத்துக் கொண்டு, வழங்கப்பட்ட சீட்டில் அச்சிடப்பட்டிருந்த ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, இதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் இட்டு, தங்களின் கடமையை நிறைவேற்றினர்;
இதற்கான வழிகாட்டுதலுக்காக, மாணவி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். வாக்காளர் களாகிய மாணவர்களின் பெயரை, பூத் ஏஜென்ட்களாக செயல்பட்ட மூன்று மாணவர்கள் சரிபார்த்தனர். மதியம் 1.15க்கு ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், 2.30 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. தேர்தலில் போட்டியிட்ட மாணவ, மாணவிகள், அறையின் வெளியே நின்று, கணக்கெடுப்பை பார்வையிட்டனர்; 3.00 மணியளவில் முடிவு அறிவிக்கப்பட்டது.
மாணவ, மாணவிகள் 100 பேர் ஓட்டளித்த நிலையில், 51 ஓட்டுகள் பெற்று மாணவர் பேரவைத் தலைவராக ஷாலினி தேவி, 54 ஓட்டுகள் பெற்று பேரவைத் துணைத் தலைவராக அனுஷா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.போட்டியிட்ட பிரீத்தி, வினோதினி, ஆஷா பிரியா, விக்னேஷ் உட்பட மாணவ, மாணவிகள் அனைவரும், வெற்றி பெற்றவர்களுக்கு, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
பள்ளி நிர்வாகி அர்ஜுனன் கூறுகையில், மாணவ, மாணவிகளின் ஆலோசனையின் படி தான், இதுபோன்ற தேர்தல் நடத்தப்பட்டது. பள்ளி நிர்வாகமே எதிர்பார்க்காத அளவில், மாணவி, மாணவிகள் தங்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனவர்களுக்கு, சிறப்பு பதவிகள் வழங்கப்படும்,'' என்றார்.
------------------------------------------------------------------------
நன்றி தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக