ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



திங்கள், 24 ஆகஸ்ட், 2009

வாருங்கள் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவோம்.


ஏணிகள் ஒருவனை உயரத்தில் ஏற்றி விடுவதற்காக உருவானவை. வாழ்க்கையிலும் ஒருவன் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால், அவனுக்குச் சில ஏணிகளும் வேண்டும். அதில் அவன் ஏறவும் வேண்டும்.

-------------------------------------------------------------------------
ஏணிகளிலும் சில டாப்டென் ஏணிகள் உண்டு. அவை :

1. AIM - குறிக்கோள் :
குறிவைக்காமல், எந்த வேடனும் அம்பை விடுவதில்லை. எந்தப் பட்டாளத்து வீரனும் துப்பாக்கியை சுடுவதில்லை. எந்த டிரைவரும் போக வேண்டிய ஊரைத் தீர்மானிக்காமல் பேருந்தை எடுப்பதில்லை.
நூறு ஆண்டுகள் வாழ்ந்து சாதனைகள் பல புரிய வேண்டிய மனிதன், சந்தோஷங்கள் பலவற்றைஅனுபவிக்க வேண்டிய மனிதன் வாழ்க்கையில் தான் யாராக உருவாக வேண்டும் என்றும் குறைந்தபட்சம் எந்த அளவுக்கு உயரவேண்டும் என்றும், எந்தெந்த வயதில் எந்தெந்த நிலையை அடைய வேண்டும் என்றும் லட்சியங்களை நிர்ணயித்துக் கொள்கிறானோ, அதுவே அவனது முதல் ஏணி.

2. PRIORITY - எது முக்கியம் என்கிற உணர்வு

தனக்கான லட்சியங்களை ஒருவன் தீர்மானித்த பிறகு அவனுக்கு ஒரு பொறுப்பு வந்து விடுகிறது. தான் அன்றாடம் செய்து கொண்டிருக்கிற ஆயிரம் ஆயிரம் வேலை களில் எவை தன்னை லட்சியம் நோக்கி நகர்த்தும், எவை தன்னை உயர்த்தும், எது முக்கியம், எது முக்கியமல்ல என்பது குறித்து தெளிவும், விவேகமும் வந்து விடுகிறது.
இது அவனது இரண்டாவது ஏணி.

3. PATH - பாதை

இன்று இப்படி இருக்கிறேன். நாளை அப்படி இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று யோசித்து, திட்டமிட்டு, செல்ல வேண்டிய நேரான, சீரான, சிக்கலில்லாத பாதையை, விரைவாகவும், வில்லங்கமில்லாமலும் குறிக்கோளிடம் கொண்டு சேர்க்கும் பாதையை, அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது மூன்றாவது ஏணி.

4. LOOK FAR AHEAD - தொலை நோக்கு

ஓரடி, இங்கு, இன்று எடுத்து வைத்தாலும், நூறடி தொலைவில், என்ன நடக்கிறது என்பதில் கவனம். தொலைவில் மங்கலாகத் தென்படும் தடைகளைப் பற்றியும், எதிர்ப்படக்கூடிய மேடுபள்ளங்கள் பற்றியும் இருக்க வேண்டிய எச்சரிக்கை யுணர்வு. எதிர்காலம் பற்றிய பாதுகாப்பு உணர்வு. சென்றடைய வேண்டிய தூரம் குறித்தும், சாதிக்க வேண்டிய காரியங்கள் குறித்தும் ஒரு தொலைநோக்கு.
இது நான்காவது ஏணி.

5. ENTHUSIASM - உற்சாகம்

தன் வளர்ச்சியைக் குறித்தும், வாழ்க்கையைக் குறித்தும் உண்மையான அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கும் தனது அறிவின் மீதும், ஆற்றல் மீதும் தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கும், உற்சாகத்திற்கு என்றுமே பஞ்சமில்லை.
தணியாத உற்சாகம் கொண்டவர்கள் மட்டுமே, தங்களது முழுச்சக்தியையும் தங்களது முயற்சிகளில் காண்பிக்கிறார்கள். முழு நேரத்தையும் முன்னேற்றத்துக்காகவே செலவிடுகிறார்கள். முட்டுக்கட்டைகள் முளைத்தாலும் முண்டியடித்து முன்னே செல்கிறார்கள்.
இந்த அபரிதமான உற்சாகமே அடுத்த ஏணி.

6. JOURNEY - பயணம்

வாழ்க்கை ஒரு பயணம் என்பார்கள். வெற்றுடம்போடு பிறந்த மனிதன், விதவிதமான செல்வங்களைத் தேடுவதும், சுகங்களை நாடுவதும், வெற்றிகளைக் குவிப்பதும், லட்சியங்களைப் பிடிப்பதும்…….. இவைதானே இந்தப் பயணத்தின் நோக்கம்.
அந்த வெற்றிகளை நோக்கி, இலட்சியங்களை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஓரடியாவது நகர்ந்தால்தானே அவன் முன்னேறுகிறான் என்று அர்த்தம். தேங்குவதும், பின்வாங்குவதும், திசை மாறுவதும் பயணம் பாழாகிறது என்பதற்கான அடையாளங்கள்.
அயராத பயணம் ஆறாவது ஏணி.

7. UPDATE THE SKILLS - திறன் மேம்பாடு

தகுதியும் திறமைகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. தன்னைச் சுற்றிலும், விரைந்து வளர்கின்ற விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி; பெருகிவரும் போட்டிகள்; அடையவேண்டிய லட்சியத்தின் அளவு; குறுகிய காலம்; இவைகளை, வளர விரும்பும் ஒரு மனிதனுக்கு, அவனது திறமைகளையும், தகுதிகளையும் அன்றாடம் அதிகரித்துக் கொள்ளவேண்டிய அவசியத்தையும், புதுப்பித்துக் கொள்ள வேண்டிய, கட்டாயத்தையும் வலியுறுத்துகின்றன.
இது ஏழாவது ஏணி.

8. INTER PERSONAL SKILLS - மனித உறவுகளில் திறமை

வெற்றிக்குக் குறுக்கே வரும் தடைகளில் பெரும்பாலானவை, மனிதர்களால் வருவதே. அன்றாட வாழ்வில், ஒவ்வொருவரும், பலதரப்பட்ட மனிதர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது. பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பொறுத்து, நெளிவு சுளிவுகளோடு, நேரத்திற்குத் தகுந்த படி சாமர்த்தியமாக சமாளித்து காரியம் சாதிக்கும் திறமை, முன்னேறவிரும்பும் மனிதனுக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியத் திறமை.
தட்டிக்கொடுத்தும், குட்டுக் கொடுத்தும், விட்டுப் பிடித்தும், சிரித்துப் பழகியும், சிடுமுகம் காட்டியும், மனிதர்களை ஆளும் திறனே எட்டாவது ஏணி.

9. CONSCIOUS ABOUT TIME - நேர உணர்வு

சூரியன் உதிக்கிறான். மறைகிறான். ஒருநாள் போகிறது. மனிதனின் ஆயுளில் ஒருநாள் குறைகிறது. அந்த ஒருநாள், அவனை எந்த விதத்திலும் உயர்த்தி யிருக்காவிட்டால், அந்த ஒருநாளிடம் இவன் தோற்றுப் போனதாக அர்த்தம். இப்படி தினமும் தோற்றுக் கொண்டிருப்பவனின் வாழ்வு வெற்றியைக் காணாமலே முடிகிறது.
கடந்துபோன, ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வாரம் , ஒரு மாதம், ஒரு ஆண்டு என் வளர்ச்சிக்கு உதவியதா இல்லையா? என்கிறகேள்வியை, நேர உணர்வு உள்ளவன் மட்டுமே கேட்க முடியும். அப்படிக் கேட்பவன் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.
அந்த உணர்வுதான் அடுத்த ஏணி.

10. EFFORTS - முயற்சிகள்

ஏனோதானோ என்றில்லாத, கடுமையான உழைப்பை உள்ளடக்கிய முயற்சிகள். எந்தத் தடை வந்தாலும், தயக்கத்தையோ, மயக்கத்தையோ தந்துவிடாமல், புதிய சக்தியோடும், புதிய யுக்தியோடும் புறப்படுகின்றதீவிர முயற்சிகள். தொடர்ந்த முயற்சிகள். இவைதான் வெற்றிக்கு உத்திரவாதம்.
இது பத்தாவது ஏணி.

இந்த டாப்டென் ஏணிகளை எப்படி இதயத்தில் எப்போதும் இருத்திக் கொள்வது?
ஆப்பிள் ஜுஸ் சாப்பிடுங்கள். போதும் என்ன விழிக்கிறீர்கள்? இந்த ஏணிகளின் முதல் எழுத்துக்களைப் பாருங்கள்.

Aim
Priority
Path
Look for ahead
Enthusiasm

Journey
Update the skills
Interpersonal skills
Conscious about time
Efforts

-----------------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மெயிலில் நான் ரசித்தது.

கருத்துகள் இல்லை: