முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.
நேற்றைய தூக்கமில்லா இரவில், தூங்குவதற்கு கடுமையான முயற்சிகள் எடுத்தும், நித்திரை நான் உன்னை நெருங்க மாட்டேன் என போராட்டம் நடத்தியதால் முயற்சியை கைவிட்டு இணையத்தில் மேய ஆரம்பித்தேன். அப்போது கடந்த சில பதிவுகளில் ஒன்று நட்பைப் பற்றி ஆராய்ந்து, ஆதங்கப்பட்டது.
உடன் என் கற்பனை சிறகடிக்க ஆரம்பித்தது(காசா? பணமா?).
நான் கடந்து வந்த பாதையில் சில நண்பர்கள்:-
உடன் பயின்ற வகுப்புத் தோழர்கள்:
ஜெயப்பிரகாஷ்: நாங்க இரண்டு பேரும் நல்லா படிக்கிற பசங்கன்னு ஊரே நம்புச்சி(நம்புங்கப்பா), நான் எது பண்ணாலும் எனக்கு துணை நின்னவன். என்னை காட்டி கொடுக்காதவன். இப்ப எங்க இருக்கான் என்ன பண்றான்னே தெரியல?
மணிவாசகம்: எங்க கேங்ல இன்னொருத்தன், நட்புக்கு மேல ரெண்டு பேரயும் வேற எதோ ஒண்ணு இணைச்சிருந்தது. சமீபத்துல சவுதில விபத்துல இறந்துட்டான்.
சக்திவேல்: ரஷ்யா மற்றும் அமெரிக்க பனிப்போர் போல, பள்ளி காலத்துலேருந்து இன்னமும் ரெண்டு பேருக்கும் நடுவில ஒரு மௌனப்போர் நடந்துகிட்டேருக்கு. ஆனாலும் நட்பு தொடர்வது, எனக்கு புரியாத ஒரு விஷயம்.
பள்ளி தாண்டி சொந்த ஊர் நண்பர்கள்:
சரவணன்: எங்க கேங்ல வயசால மூத்தவன். ஆனாலும் வாடா போடா, மாமன் மச்சான் நண்பன்.
சிவபாலன்: காரணம் புரியாமலேயே நட்பு பாராட்டுபவன்.
வெங்கடேச பெருமாள்: அண்ணனாகவும் நண்பணாகவும் இருக்க முடியும் என்று, இன்று வரை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.
பள்ளி தாண்டி, ஊர்ப்பாசம் தாண்டிய நண்பர்கள்:
செந்தில்நாதன்: ஒரு சிறு உரசலில் ஆரம்பித்த நட்பு, பதினைந்து வருடங்களை கடந்து கொண்டிருக்கிறது.
சேதுசங்கர்: வயதில் மிக மூத்தவர். ஆனாலும் நண்பர்.
எரிக் மாணிக்கம்: குருவுக்கு குருவாய், நட்புக்கு நட்பாய் ................
கணேஷ் அவுட்டி(Ganesh Auti): மகராஷ்ட்ரத்தின் ஒரு சிறு நகரத்தை சேர்ந்தவன். ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல்(புரியாமல்) நான் மும்பையில் தத்தளித்த போது, என்னைக் கைப்பிடித்து கரை சேர்த்த தோழன்.
ராஹுல் கும்பாரே(Rahul khumbare): என்னுடைய மும்பை அணியில், என்னுடன் பணி புரிந்த, நான் மும்பையில் ஒரளவிற்கு வெற்றி பெற, என்னுடன் தோள் கொடுத்தவன்.
நாராயணன்: கோவையை சேர்ந்தவர்.
ராஜேந்திரன்: கோவையைச் சேர்ந்தவர், நீண்ட நாள் பழகியவரைப் போல் முதல் சந்திப்பிலிருந்து இன்று வரை................. நான் மனதளவில் மிக நெருக்கமாக உணர்பவர்.
செல்வேந்திரன்: நேரில் பழகியது சில காலமே எனினும், மனதளவில் என் அருகில் இருக்கும் நண்பனைப் போன்ற உணர்வில் எப்பொதும்...........
ரமேஷ்: திருப்பூரில் பணிபுரியும், வெயிலூருக்கு சொந்தக்காரர். இவருடனான முதல் சந்திப்பு மறக்க இயலாதது(திருப்பூரில் ஒரு restaurent-ல் இருவரும் அருகருகில் அரை மணி நேரம் ஒருவருக்கொருவர் காத்திருந்தோம்) ஊர் சுற்றுவதில் அலாதி பிரியம். இவருடனான நெல்லியம்பதி சுற்றுலா மறக்க இயலாதது.
கார்த்திகை பாண்டியன்: மதுரையம்பதியை சேர்ந்தவர். இதுவரை நேரில் சந்திக்கவில்லை. எனினும் நண்பர்கள் எனும் நினைவில் உடனே வருபவர்.
சதீஷ்குமார்: இப்போது பெங்களூரில் வாசம். நான் இவனை நினைக்கும் போதெல்லாம், எனக்கு நினைவுக்கு வருவது, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்புதான். எவ்வளவு நாட்கள் பார்க்காமல் பேசாமல் இருந்தாலும், மீண்டும் பார்க்கும் போது துளி கூட பழைய நாட்களைப் பற்றி பேசாமல், விட்ட இடத்தில் தொடர்பவன்.
நண்பர்கள் என்ற உடன் என் நினைவில் வந்தவர்கள் இவர்கள். இன்னும் சில நட்புகளைப் பற்றி வரும் நாட்களில்..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக