ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



திங்கள், 29 ஜூன், 2009

அன்புள்ள? கணவனுக்கு!! -உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக

இரவு ஏழு மணியளவில் அவருடைய அப்பாவிடமிருந்து போன் வந்தது.  அதிலிருந்து இரண்டு பேருக்கும் சண்டை ஆரம்பமாயிற்று . இந்த விஷயத்தில் நான் செய்தது எனக்கு தவறாக தெரியவில்லை. எனக்கு அவரைப் பற்றி முழுசாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தது தவறா?  அவரு என்கிட்டே ஒரு சில விஷயங்களை மறைக்கிறார். எனக்கு தெரிய கூடாது என நினைக்கிறார். நான் அவரிடம் பணம் இல்லை என்று நினைத்து செலவு செய்வதே இல்லை . ஆனால் அவரோ என்னிடம் சொல்லாமலே கேமரா வாங்கிய  ட்யு -ரூபாய் 6000 வரை கட்டியுள்ளார். இதை நானே கேட்ட பிறகு சொல்கிறார்.

அவரிடம் பணம் இல்லை என்று நான் மிக தேவையான முக்கியமான உள்ளாடைகளை கூட வாங்கி தாங்க என்று அவர்கிட்ட சொன்னதில்லை. சரி பணம் இல்லை. சம்பளம் குறைவாகத்தான் வருகிறது. அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ஆனால் அவரோ சம்பளம் வெறும் பன்னிரெண்டாயிரம் மட்டுமே வந்து செலவு செய்யற மாதிரி என்னிடம் நடந்து கொள்கிறார். அவர் என்னிடம் அடிக்கடி சொல்வது, காட்டுவது, பார் என்னிடம் இவ்வளவுதான் இருக்கு. இதை வைத்துதான் அந்த செலவு, இதை வைத்துதான் இந்த செலவு என்று என்னிடம் காரணம் சொல்லிவிடுவார்.

அவருடைய அப்பா பணம் கேட்டால் மட்டும் எந்த காரணமும் கேட்காமல் எப்படியாவது பணம் கொடுப்பார். அனால் என்னை நம்பி ஒற்றை நூறு ரூபாய் நோட்டைக் கூட கொடுக்க மாட்டார். நான் என்ன அவர் பணம் கொடுத்தால் என் அம்மா வீட்டிற்காகவா செலவு செய்கிறேன்? என்னை பொறுத்தவரை, என் அம்மா வீட்டில் எனக்காக எவ்வளவோ செய்து இருக்கிறார்கள். பாவம், அவர்களும் மூன்று பெண்களைப் பெற்று விட்டு எவ்வளவோ கஷ்டப் படுகிறார்கள். அவர்கிட்டையும் பணம் இல்லை என்று நான் எதையும் ஆசைப் பட்டு கேட்கிறது கூட இல்லை. என்னை ஏன் அவர் புரிஞ்சுக்க மாட்டேங்கிரார்ன்னு தெரியல?

நான் அவர்கிட்ட கேள்வி கேட்க கூடாது. அப்படி அவர் சொல்றது, எனக்கு இந்த வீட்ல ஒரு வேலைக்காரி மாதிரி இருக்கிரோமோன்னு தோணுது. ஏன்னா, ஒரு வேலைக்காரிதான் வருவாள், சமைப்பாள், துணி துவைப்பாள், வீட்டை பெருக்குவாள், போயிடுவாள் . அவளுக்கு கூட ஒரு உரிமை இருக்கிறது, மாதம் பிறந்தால் சம்பளம் குடுங்கன்னு கேட்க!  ஆனால் நான் அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது. கேள்வி கேட்க உரிமை இல்லை.

ஆனால் இவரை பத்தின விஷயம் எல்லாம் இவருடைய அக்காவுக்கு தெரியும் அளவுக்கு கூட, எனக்கு எதுவும் தெரியாது. எதுக்குதான் இந்த கல்யாணம் குடும்பம் எல்லாம் செய்யறாங்கன்னு தெரியல. கணவன் செய்யும் எந்த விஷயத்திலும் மனைவிக்கு பங்கு இல்லை. அவள் எதையும் கேட்கவும்  கூடாது.  அப்படித்தான் அவுரு சொல்லுவாரு.

அவர் சொல்லுவாரு, நீ சொல்லறதை எல்லாம் கேட்டு நடக்கறதுக்கு ஒரு பொம்மையைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கணும்னு.

அவரிடம் நான் எதையும் கேட்காமல் அவர் சொல்வதை கேட்டு அமைதியாக ஒரு உயிரற்ற பொருளாக நான் இருக்கணும்னு அவர் நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

அவர் என்னை பொண்ணு பாக்க வர்றதுக்கு முன்னாடி ரெண்டு, மூணு மாப்பிள்ளங்க வந்தாங்க. ஆனால் எனக்கு யாரையும் புடிக்கல.

எனக்கு பிடித்தவர் இவர் மட்டும்தான். ஏன்னா, இவர் பெண் பாக்க வந்தப்போ, தனியா பேசனும்னு சொல்லி இவர் பேசின சில விஷயத்தை நம்பினேன். இவர் உண்மையைத்தானே சொல்றார். கல்யாணத்துக்கு அப்புறமும் நம்மகிட்ட உண்மையா இருப்பாருன்னு நம்பினேன்.

ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய விஷயம் மறைக்கிறார். இவரு வாங்குகிற சம்பளம் எவ்ளோன்னு இதுவரைக்கும் உண்மையாய் சொன்னதில்லை. ஒரு மாசம் பதினைந்தாயிரம் ஒரு மாசம் இருபதாயிரம் ன்னு மாத்தி மாத்தி வருது.

எங்க அப்பாவும் கம்மியாதான் சம்பாதிச்சார். ஆனா எதாவது வாங்கனும்னு காசு கேட்டா தருவார். ஆனால் இவர்கிட்ட கேட்டா பத்து தடவை யோசிக்கிறார். ஒரு hand-bag வாங்கனும்னு ரெண்டு மாசமா கேட்டுகிட்டு இருக்கேன். வாங்கித் தரேன், வாங்கித் தரேன்னு சொல்லிகிட்டே இருக்காரே தவிர இதுவரையிலும் வாங்கித்தரலை.

ஆனால் அவங்க அம்மா அன்னிக்கி வந்தப்போ. மீன் வாங்கிட்டு வான்னு ஒரு தடவை தான் சொன்னாங்க. உடனே போய் வாங்கிட்டு வராரு. வீட்டுக்கு ஏதாவது வேணும்னு சொன்னா மட்டும் ,போறேன் போறேன்னு சொல்லிட்டு, மூணு, நாலு நாள் கழிச்சு வாங்கிட்டு வருவாரு.

என்னால டயரி கூடத்தான் பேச முடியுது, நானும் ஒரு உயிருள்ள பொம்மைதான். என்கூட பேசவும் கொஞ்சம் நேரம் குடுங்களேன்!

 ---------------------------------------------------------------------
உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதிய சிறுகதை. போட்டியின் விவரங்கள் இங்கே இருக்கு.

2 கருத்துகள்:

butterfly Surya சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள்.

நாடோடி இலக்கியன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள் சிவா...!