*************************************************************************************
அழகை மட்டுமே ஆராதிக்கும், இன்றைய ஆண்களின் மனநிலையை என்னுடைய கசப் பான அனுபவத்தின் மூலம் தங்களுக்கு எழுதுகிறேன்.
அரசுப் பணியில் ஆசிரியை யாகப் பணியாற்றும், 29 வயது மணமாகாத பெண். அன்பான, அடக்கமான, பொறுமையான பெண் என்றும், கருப்பு நிறத்திலும், களையாக இருப்பதாகவும் மற்றவர்கள் என்னை கூறுவதுண்டு.
கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் என் கையில் ஒரு தையல் தழும்பு. இதுதான் என்னுடைய மைனஸ் பாயின்ட். நான் இதை ஒரு பொருட்டாகவே இதுவரை நினைத்ததில்லை.
தந்தையில்லாத காரணத்தால், எனக்கு நானே, வரன் தேட வேண்டிய துர்பாக்கிய நிலை. வந்த ஒன்றிரண்டு வரன்களும், என்னுடைய பணத்தையே குறியாக வைத்து பேசியதால் எனக்கு அவர்களைப் பிடிக்கவில்லை. என் பணத்தை விட என்னை உண்மையாய் நேசிக்க கூடியவரை மனம் தேடியது.
டிப்ளமோ முடித்த, தாரமிழந்த, "இன்ஜினியர்' ஒருவரின் ஜாதகம் வந்தது. 32 வயது. பெண் பார்க்க வரச் சொன்னேன். பெண் பார்க்க வந்த அன்று தான், அவனுக்கு மூன்று குழந்தைகள் என்ற விபரம் தெரிந்தது.
"எனக்கு வேலைக்கு போகும் பெண் கூட தேவையில்லை. பெண் விருப்பப்பட்டால் வேலைக்கு போகட்டும். திருமணத்திற்கு பிறகு இவ்வாறு நேர்ந்தால் (தழும்பினை) என்ன செய்யப் போகிறோம்!' என்றான்.
அவன் சொன்ன வார்த்தைகள் எனக்குப் பிடித்திருந்தது. அவன் ஒரு அன்பான மனிதனாக இருப்பான் என்று நான் முடிவு செய்தேன். இருவரிடமும் பொருளாதார நிறை இருக்கும் போது மூன்று குழந்தைகள், எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. ஆனால், என் குடும்பத்தினர், யாருக்குமே இந்த இடம் பிடிக்கவில்லை. "ஏன் சுமை யை உன் தலையில் நீயே போட்டுக் கொள்கிறாய்?' என்றனர். "அன்பான மனிதன் இந்த உலகத்தில் கிடைப்பது அரிது. ஆகவே, இவரையே எனக்கு திருமணம் செய்யுங்கள்...' என்று, என் குடும்பத்தினரை வற்புறுத்தி சம்மதம் பெற்றேன்.
அதன் பிறகு நாங்கள் இருவரும் தொலைபேசி மூலம் அன்பை வளர்த்துக் கொண்டோம். திருமண நாளை நிச்சயம் செய்யக் கூடிய நிலை. என்னை தனியே சந்தித்து, "நிறைய பேச வேண்டும்!' என்றான்.
எங்கள் ஊரின் பிரசித்தி பெற்ற கோவிலை, நாங்கள் சந்திக்கும் இடமாக தேர்ந்தெடுத்தேன். நேரில் சந்தித்த அவன், அதன் பிறகு அடித்த டயலாக் தான் இந்த கடிதத்தின், "ஹைலைட்' விஷயம்.
"உன்னை என் குடும்பத்தினர் யாருக்கும் பிடிக்கவில்லை. மேலும் உன் கையில் உள்ள இந்த தழும்பால் உன்னை, நான் என்னோடு வெளியில் எங்கும் அழைத்துச் செல்லக் கூட முடியாது. வண்டியில் உட்கார வைத்தும் அழைத்துச் செல்லவும் முடியாது. உன்னை நான் திருமணம் செய்து கொண்டால் என்னை எல்லாரும் மட்டமாக நினைத்து விடுவர். உன்னோட நிறைய பழகிவிட்டு, உன் மனதிலும் ஆசைகளை வளர்த்து விட்டேன்.
"தற்போது எனக்கு வேறொரு பெண்ணை நிச்சயம் செய்து விட்டனர். ஆகவே, ஒரு கோவிலில் ரகசியமாக தாலி கட்டி, 15 கிலோ மீட்டருக்கு அப்பால், உன்னை வைத்துக் கொள்கிறேன். ஈவ்னிங் டைம்மில் (ரகசியமாக) உன்னை வந்து பார்த்து செல்கிறேன் அல்லது உன் ஊரிலேயே இரு... அவ்வப்போது வந்து பார்த்து செல்கிறேன்...' என்றானே பார்க்கலாம்.
என் இதயத்தில் ஈட்டி செருகிய உணர்வு. இத்தனைக்கும், அவன் ஒன்றும் ஷாருக்கானோ, விஜயோ, கமலோ அல்ல. வடிவேலு ரேஞ்சுக்கு கூட, தேற மாட்டான். 3540 கிலோவுக்குள், ஐந்தடியில் ஒரு நோஞ்சான் உடம்பு. களையே இல்லாத வெயிலில் நின்று, நின்று கறுத்துப் போன முகம், தண்ணி அடித்து... அடித்து... சிவந்து போன விழிகள்.
செயின் ஸ்மோக்கிங்கால்... இந்த வயதிலேயே நிக்கோடின் கரை பிடித்த உதடுகள், காவி நிற பற்கள். தலையில் ஆங்காங்கே வெள்ளை முடிகள். பென்சிலால் கோடு வரைந்தது போன்ற மெல்லிய மீசை.
இப்பேர்பட்ட அழகனை திருமணம் செய்து கொள்ள நான்தான் நிறைய யோசனை செய்திருக்க வேண்டும். நான் அவன் சொன்ன வார்த்தைகளை நம்பி, அவன் மனதை மட்டுமே ரசித்தேன். உண்மை அன்பை மட்டுமே தேடினேன். "அன்பை, அன்பை' மட்டுமே யாசித்தேன்.
அவனுக்கு மூன்று குழந்தைகள் இருந்ததால், "நான் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்!' என்று கூட அவனிடம் கூறியிருந்தேன். (எல்லாம் அவனுடைய அன்பிற்காகத்தான்.)
ஒரு பெண்ணுக்கு, சமூகத்தில் கிடைக்கக் கூடிய விலைமதிப்பற்ற பதவி, "மனைவி' என்ற உயர்ந்த அந்ததஸ்துதான். அதையே அவன் (மூன்று இஞ்ச் நீளத் தழும்பிற்காக) எனக்கு தர முன் வராத போது, எனக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது.
நாக்கை பிடுங்கிக் கொள்ளக் கூடிய இரண்டு கேள்விகளை எனக்கு தகுதியில்லாத அவனிடம் கேட்டு விட்டு விலகினேன்.
*************************************************************************************************************
--எழுதியது யாரோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக